Saturday, September 23, 2017

#திருமண_முறை

கவுண்டர்களின் திருமணங்கள் விமர்சையாக நடக்கும். பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.
கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.
என்று அப்பாடல் தொடங்கும். கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும்.
முதல் நாள் (நாள் விருந்து) - இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.
இரண்டாம் நாள் (கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்) - இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும். ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.
இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.
இரண்டாம் நாள் (கங்கணம் கட்டுதல் ) - அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.
இரண்டாம் நாள் (நிறைநாழி செய்தல்) - வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.
இரண்டாம் நாள் (இணைச்சீர்) - இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுள் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையைத் தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.
மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.
மூன்றாம் நாள் (முகூர்த்தம்) - இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க, மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல நாணைக் கட்டுவார்..

No comments:

Post a Comment